×

நீட் தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது- ஜி.கே. வாசன்

 

கோவை குண்டு வெடிப்பு குறித்து தமிழக கவர்னரின் கருத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தானே தவிர அரசியலுக்காக அல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் இன்று நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பல மாவட்டங்களில் கன மழை இருக்கும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர்கள் அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுக்க வேண்டும். தாழ்வான பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். மோட்டார் வாகன அபராதம்  தேவை தான். ஹெல்மெட் தேவை தான். உயிருக்கு பாதுகாப்பு. அதே சமயத்தில் அபராதம் குறைக்கப்பட வேண்டும். 

மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் உள்ள மக்களுக்கு மோட்டார் வாகன சட்டம் குறித்து அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கோவை குண்டு வெடிப்பு சம்மந்தமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறிய கருத்து என்பது குண்டு வெடிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தான் அரசியலுக்காக அல்ல.  பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்றத் தொகுதிகளில் பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு இன்னும் முழுமையாக பலன் கிடைக்கவில்லை. 2021லிருந்து பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பது விவசாயிகளை வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது. 

கடந்த மாதம் பெய்த மழையால் 25 சதவீதம் பாதிப்படைந்துள்ளது. பாதிப்படைந்த விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் கொடுக்க வேண்டும். தொடர் மழையால் நிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே வடிகால் வசதிகளை அரசு பொதுப்பணித்துறை காலக்கெடுவுக்குள் எல்லா பகுதிகளிலும் ஏற்படுத்திதர வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது என்பது எனது கருத்து. அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக உயர்த்தியிருக்கிறது. இது ஆறுதலே தவிர கூடுதலாக உயர்த்த வேண்டும் என்றார். மீனவர் பிரச்சனை தொடர் பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் இருக்கிறது. வாழ்வாதாரத்திற்காக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டும் என்றால் அவர்களுக்கு பாதுகாப்பு தேவை. அச்சம் இல்லாமல் அவர்கள் செல்ல வேண்டும், அப்படியென்றால் இலங்கையின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்படியென்றால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேலும் ஆக்கபூர்வமான முறையில் பேசி நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய தொடர் வேண்டுகோளாக இருக்கிறது. 

கோவை குண்டுவெடிப்பு விவகாரத்தில் என்ஐஏ உண்மை நிலையை விரைவில் வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன். தமிழகத்தில் உளவுத்துறையின் பணி போதுமானதல்ல. மக்களுக்கு திருப்தி இல்லை. அதை பலப்படுத்த வேண்டியது அரசின் கடமை. பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை அடக்க வேண்டும். ஜாதி, மதம், இனம் கிடையாது” எனக் கூறினார்.