×

பால்  கொள்முதலில் விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் திமுக - பாஜக

 

பால் கொள்முதலில் திமுக விவசாயிகளுக்கு துரோகம் செய்வதாக பாஜக விவசாயிகள் அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவினின் ஆரஞ்சு நிற ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.48-லிருந்து ரூ.60 ஆக  25% விற்பனை விலையை உயர்த்திவிட்டு, விவசாய பால்உற்பத்தியாளர்களுக்கு  லிட்டருக்கு ரூ.32-லிருந்து ரூ.35 ஆக உயர்த்தி வெறும் ரூ.3 அதாவது  9% கொள்முதல்விலை உயர்வு என்பது விவசாயிகளை ஏமாற்றும் செயல். திமுக அரசு விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்.

தமிழக அரசு சாராய விற்பனையில் அதிக இலாபம் பெற காட்டும் தொழில்நுட்பத்தை பால்உற்பத்தியாளர்கள் இலாபம் பெறவும்,வாழ்வாதாரம் பெறவும் நடைமுறைப்படுத்த வேண்டும்.மின்கட்டணத்தை 12% முதல் 52% வரை உயர்த்தி பொதுமக்களை வஞ்சிக்கும் அரசு. திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, மாதம் ஒருமுறை மின்கட்டண பயன்பாட்டு கணக்கு எடுக்கப்பட்டால் பொதுமக்கள் மின்கட்டண உயர்விலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

சொன்னதைச் செய்யாமல் மின்கட்டண உயர்வு விவகாரத்தில் பொதுமக்களையும் ஏமாற்றியிருக்கிறது திமுக அரசு.இந்த விலை உயர்வு அந்த நிறுவனங்களின் ஊழல்வாதிகளுக்கு பயன்படுமே ஒழிய நாட்டுநலனுக்கு பயன்படாது.மொத்தத்தில் தமிழக மக்களை தேர்தல் அறிக்கையின் மூலம் நம்ப வைத்து ஏமாற்றிய திராவிடியன் மாடல் ஆட்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.