×

ஐ.நா சபைக்கே சென்றாலும் வெற்றி இபிஎஸ்.,க்கு தான் - ஜெயக்குமார்

 

அதிமுக அலுவலக விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஐ.நா.சபைக்கே சென்றாலும் வெற்றி எடப்பாடி பழனிசாமிக்கு தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை  ராயப்பேட்டையில் உள்ள  அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.இதில் இருதரப்பினரும் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிக் கொண்ட நிலையில் நிலைமையை கட்டுப்படுத்த வருவாய் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுக்கள்  பலமுறை விசாரிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.  அதில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி ,எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு மாதத்திற்கு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளை அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே மேல்முறையீட்டுக்கு தகுந்த வழக்கு தான் என ஓ.பன்னீர்ல்செவத்தின் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: அதிமுக அலுவலகம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு எங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயம். ஆனால், ஓபிஸ் தரப்பிற்கு இந்த தீர்ப்பு இடி விழுந்தது போல் இருக்கும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த கோயில் அதிமுக தலைமை அலுவலகம். அப்படிப்பட்ட கோயிலை இடிப்பது போல் ஓபிஎஸ் செய்த கீழ்த்தரமான செயல் அதிமுக தொண்டர்களை கொந்தளிக்க வைத்தது.இதனால் தொண்டர்கள் மனம் நொந்து போயினர். கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு பாடம் கற்பிப்பது போல உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அமைந்துள்ளது. இனி ஓபிஎஸ் என்ன சட்ட நடவடிக்கை எடுத்தாலும் சரி, அவர்களிடம் இனி என்ன இருக்கிறது? அதிமுக தொண்டர்களுக்கு வீணாக மன உளைச்சல் ஏற்படுத்த நினைக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். எங்கே சென்றாலும் ஓபிஎஸ் தரப்புக்கு வெற்றி கிடைக்காது. ஓபிஎஸ் தரப்பு ஐ.நா சபைக்கே சென்றாலும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் வெற்றி கிடைக்கும். அதிமுக உட்கட்சி விதிகளின்படி பொதுக்குழு அதிகாரம் படைத்தது. சர்வ வல்லமை படைத்த பொதுக்குழு முடிவின்படி எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி இயங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் முடிவும்.

ஓபிஎஸ் தரப்பு அதிமுக தலைமைக் கழகம் பூட்டியே கிடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தது. ஆனால், இன்று தலைமைக் கழக சாவி எங்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்தாலும், பொதுக்குழு எனும் அமைப்பின் அதிகாரப்பூர்வ முடிவுகள் எங்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. கட்சி விதிகளின்படியே எல்லாம் நடந்திருக்கின்றன. ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டில் என்ன வாதம் வைத்தாலும், எங்கள் சட்ட வல்லுநர்கள் அதை முறியடிப்பார்கள். இவ்வாறு தெரிவித்தார்.