×

ஓபிஎஸ் இல்லத்தில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

 

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓ.பி.எஸ் இல்லத்தில் கூடுதல் பாதுகாப்பிற்காக ஏற்கனவே சென்டர் மீடியத்தில் பொறுத்தப்பட்டிருந்த கேமராக்கள் பழுதடையும் நிலையில் இருந்ததால் அதனை நீக்கிவிட்டு ஓ.பி.எஸ் இல்லம் மற்றும் அதன் எதிர்புறத்தில் இல்லத்தின் முகப்பு தெரிவதுபோல் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த 11 ஆம் தேதி அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம், வானகரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதே நேரம் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்தில் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பினரிடையே கடும் கோஷ்டி மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. அப்போது தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ.பி.எஸ் அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து  சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. கலவரத்தில் 45-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஓ.பி.எஸ்-க்கு வழங்கப்பட்டுள்ள தனி போலீஸ் பாதுகாப்பை பின்வாங்க வலியுறுத்தி அ.தி.மு.க தென்சென்னை வடக்கு(கிழக்கு) மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் டி.ஜி.பி அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். 

அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற உட்கட்சி கலவரம் காரணமாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இல்லத்தில் காவலர்களால் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. அதன் ஒருபகுதியாக ஓபிஎஸ் இல்லத்திற்கு முன்பு ஏற்கனவே பொறுத்தப்பட்டிருந்த கேமராக்களோடு அவரின் இல்லத்தின் முகப்பு பகுதி நன்கு தெரிவதுபோன்று  கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் செல்லும் முக்கிய சாலை என்பதால் அதி நவீனத்துடனான  கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.