×

பிரபல ரவுடி பினு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரண் 

 

போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு, தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில், திடீரென அவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சென்னை கொளத்தூர் லக்‌ஷ்மிபுரம் பகுதியைச் சேர்ந்தவன் 55 வயதான பினு . A+ வகை ரவுடியான பினு மீது 4 கொலை வழக்கு, கொலை முயற்சி, கொள்ளை, ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது. ரவுடி பினு கடந்த 2018-ஆம் ஆண்டு மாங்காடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஒரே இடத்தில் கூட்டி அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து போலீஸிடம் சரணடைந்த பினு, தான் அவ்ளோ பெரிய ரவுடி இல்லை. திருந்திய வாழ போவதாக கூறி வீடியோ வெளியிட்டான். இருப்பினும் பிணையில் வெளியில் வந்து மாமூல் வசூல், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது என பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால் இரண்டு முறை கைது செய்யப்பட்டு  பின்னர் தலைமறைவாக இருந்து வந்தான். 

இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி தியாகராயர் நகர் ஜி.என்.செட்டி சாலையில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த செல்போனை கொண்டு வந்த டெலிவரி ஊழியரிடம், மிரட்டி செல்போனை பறித்து தாக்கிவிட்டு துரத்தி அடித்த வழக்கில் பினுவை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் பினு, தனது வழக்கறிஞர் மூலம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரண்டைந்தான். இதனையடுத்து ரவுடி பினுவை கைது செய்த போலீசார் சைதாப்பேட்டை 18வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருஷ்ணன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது ரவுடி பினு தான் இதய நோய் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும் தன்னை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்குமாறு முறையிட்டான். அதன்படி ரவுடி பினுவுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்குமாறு நீதிமன்ற நடுவர் கிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நேற்று இரவு 11 மணி அளவில் ரவுடி பினுவை போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.