×

#BREAKING ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு

 

பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடவுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் படி, காலியிடம் ஏற்பட்ட சட்டமன்ற தொகுதியில் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தி புதிய சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனையடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

இதுகுறித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2023ஆம் ஆண்டு வரும் பிப்ரவரி திங்கள் 27ஆம் நாள் தமிழகத்தில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலையொட்டி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து பேசி, ஏற்கனவே 2021ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றக் காரணத்தால், தற்போது இடைத் தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.