×

“திமுகவினரை போல் அதிமுகவினர் கொள்ளையடித்து பணம் சேர்க்கவில்லை” 

 

அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா  பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகே இன்று இரவு நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தாலும், சேலத்தில் அதிமுகதான் ஆட்சியில் இருக்கிறது. மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சேலத்திற்கு ஒரு அமைச்சர் போட்டிருக்கிறார்கள். அவர் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. இன்னும்  44 அமாவாசைகளால் தான் திமுக ஆட்சிக்கு உள்ளது. 

2024-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறது. திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் என்று நான் சொன்னதற்கு,  நிறைய முதலமைச்சர்கள் இருக்கிறார்கள் என ஸ்டாலின் சொல்கிறார். 4 முதலமைச்சருக்கே நாடு தாங்கவில்லை. இன்னும் நிறைய பேர் என்றால் நாமெல்லாம் வெளிநாட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.  என்னை டெம்பரரி தலைவர் என்கிறார். கருணாநிதி இருக்கும்போது ஸ்டாலின்தான் டெம்பரரி தலைவராக இருந்தார். எங்களை குறை சொல்ல ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது. அதிமுகவில் அனைத்து தொண்டர்களுமே பொதுச் செயலாளர் தான்.  அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஒன்று கூடி தான் என்னை தேர்ந்தெடுத்தனர். இதை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை. எந்த காலத்திலும் அதிமுகவை உடைக்க முடியாது. கனவு கண்டால் கானல் நீராகத்தான் இருக்க முடியும். சில கறுப்பு ஆடுகள் திமுகவிற்கு துணை போகிறார்கள். அவர்கள் முயற்சி பலிக்காது.
 
அதேபோல தற்போது அதிமுக தலைவர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். மாவட்ட நிர்வாகிகள் மீது மட்டுமல்லாமல் அங்கிருக்கும் அதிமுக நிர்வாகிகள் அனைவரின் வீடுகளிலும் சோதனை நடத்துகிறார்கள். திமுகவை போல அதிமுகவினர் கொள்ளையடித்து பணம் சேர்க்கவில்லை. சேலத்தில் இளங்கோவன் வீட்டில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவருக்கு நெருக்கமானவர் என பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர்  டைலராக உள்ள அவர் வீட்டிலும்  சோதனை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மிரட்டுகிறார்கள். இதன் மூலம் அதிமுகவை மிரட்ட முடியாது. எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா  போல பல சோதனைகளை எதிர்கொண்டு ஆட்சிக்கு வந்தவர் நான். அதேபோல மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும். நான் முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சிகளை ஒடுக்க ஆட்சி நடத்தவில்லை. யாரையும் பழிவாங்கவில்லை. மாற்றுக் கட்சி, எதிர்க்கட்சியினரை பழிவாங்கவில்லை. அன்றைக்கு வேறு. இன்றைக்கு வேறு. சதித்திட்டம் தீட்டுகிறீர்கள்.


 
திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் வேகம் காட்டப்படுவதில்லை. அந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய பார்க்கிறார்கள். காவல்துறையை வைத்து வழக்குகளை வாபஸ் பெற பார்க்கிறார்கள். மக்கள் துணையோடு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே சொத்து மதிப்பு எவ்வளவு, தற்போது எவ்வளவு என்பதை கணக்கெடுத்து சோதனை நடத்தப்படும். என்னுடைய சொத்துக் கணக்கை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். திமுக அமைச்சர்கள் மைல் கணக்கில் காம்பவுண்ட் வைத்து வீடுகளை கட்டியுள்ளனர். அதை சும்மா விட மாட்டோம். எங்களை துன்புறுத்துபவர்களை விட்டு விட மாட்டோம். மக்கள் துரதிருஷ்டவசமாக திமுகவிற்கு வாய்ப்பை கொடுத்துள்ளார்கள். அதனை மக்களுக்கு நன்மை செய்ய பயன்படுத்துங்கள்.   
 
ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்துவதுதான் செய்தியாக வருகிறது. எதுவும் தெரியாத பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். இதைச் சொன்னால் ஆர்.எஸ்.பாரதிக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. திட்டத்தை அறிவித்தவுடன் குழு போட்டு விடுகிறார். இப்படி 38 குழு போட்ட ஒரே முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். குழு அரசாங்கமாக திமுக அரசு இருக்கிறது. அப்படி என்றார் அரசு செயலாளர்கள், அமைச்சர்கள் எதற்கு இருக்கிறார்கள். ஏழெட்டு பேரை குழுவில் உறுப்பினராக போட்டு விடுகிறார். அவர்களுக்கு திட்டத்தைப் பற்றி எதுவும் தெரிவதில்லை. குழு கொடுக்கும் அறிக்கையை அரசு செயலாளர் நடத்த நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள். 25 ஆண்டுகாலம் பணி அனுபவம் மிக்க ஐஏஎஸ் அதிகாரிகளின் பேச்சு எடுபடுவதில்லை. 38 குழுக்கள் போட்டு திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன” எனக் கூறினார்.