×

கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு காவல்துறை தான் காரணம் - எடப்பாடி பழனிசாமி

 

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் குறித்து பெற்றோர் புகார் தெரிவித்த போதே துரிதமாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று கலவரம் ஏற்பட்டிருக்காது. காவல்துறை தான் இன்றைய கலவரத்திற்கு முழு காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக சென்னை அடையாறு கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுகவின் 63 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பாஜக முகவர்களான எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் பங்கேற்று குடியரசு தேர்தலில் வாக்களிப்பது குறித்து  ஆலோசனை வழங்கினர். மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தாயார் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். மாணவி துன்புறுத்தியதாக அவரது தாய் கூறியுள்ளார். பள்ளி நிர்வாகம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னரே தெரிவித்திருந்தால்  இன்றைய கலவரம் நடந்திருக்காது. பெற்றோருக்கு நீதி கிடைக்காத காரணத்தினால் தான் அசாதாரண சூழல் ஏற்பட்டது. மூன்று நாட்களாக நீதி கேட்டு போராடியும், அவர்களுக்கு எந்த ஆறுதலும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. பெண்கள், மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. உளவுத்துறை முற்றிலும் செயலிழந்து விட்டது. மாணவியின் பெற்றோர் புகார் தெரிவித்த போதே துரிதமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்ட இருந்தால் இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது. காவல்துறை தான் இன்றைய கலவரத்திற்கு முழு காரணம்” என தெரிவித்தார்.