×

எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை தொட்டு கூட பார்க்க முடியாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு

 

ஒரு சிலர் திமுகவுடன் இணைந்து அதிமுகவை அழித்து விடலாம் என நினைக்கின்றனர், ஆன்னால் எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.,வை தொட்டு கூட பார்க்க முடியாது என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

திருச்சி விமான நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: சிலர் தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, அ.தி.மு.க.,வை பிளக்கப் பார்க்கின்றனர். எந்த கொம்பனாலும், அ.தி.மு.க.,வை தொட்டுக் கூட பார்க்க முடியாது. ஒருபோதும், அவர்கள் கனவு நிறைவேறாது. நான் பெரிய தலைவனாக இருந்து வரவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியோடு அவர்கள் வழியில் உங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.பன்னீர்செல்வத்துடன், 11 எம்.எல்.ஏ.,க்களும், 10 பொதுக்குழு உறுப்பினர்களும் தான் இருந்தனர். அ.தி.மு.க.,வினர் விரும்பியதால் தான், அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். தற்போது, மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாகி உள்ளது. 

கடந்த 1989ல் போடிநாயக்கனுாரில் ஜெயலலிதா போட்டியிட்ட போது, 'வெண்ணிற ஆடை' நிர்மலாவின் 'சீப் ஏஜன்டாக' செயல்பட்டவர், எப்படி ஜெயலலிதாவின் விசுவாசியாக இருக்க முடியும்?இயக்கத்துக்கு துரோகம் இழைத்துக் கொண்டிருந்தவர், இப்போது இணைவதாக கூறிக் கொண்டிருக்கிறார். குண்டர்களுடன் சேர்ந்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கி, அங்கிருந்த ஆவணங்களை திருடிச் சென்றவர், எப்படி இணைய முடியும்? இதை, எப்படி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வர்?இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் கட்சியை நேசிப்பவர்கள், உண்மையாக உழைப்பவர்கள், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கின்றனர். தி.மு.க.,வுடன் இணைந்து, இயக்கத்தை பிளக்க நினைப்பவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.