×

அதிமுகவை கொல்லைப்புறமாக பழிவாங்க மு.க.ஸ்டாலின் முயற்சி - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

 

அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வை எதிர்கொள்ள முடியாத தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொல்லைப்புறமாக சட்டப்பேரவைத் தலைவர் மூலமாக எங்களை பழிவாங்கப் பார்க்கிறார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் இன்று எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.  உதயகுமாரை அங்கீகரிக்க கோரி   அமலியில் ஈடுபட்டனர்.  தொடர் அமளியின் காரணமாக பேரவை தலைவர் அப்பாவு அதிமுக எம்எல்ஏக்களை  வெளியேற்ற காவலர்களுக்கு உத்தரவிட்ட நிலையில் அவர்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர் . இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: நியாயமாக நடுநிலையோடு செயல்படவேண்டிய சபாநாயகர், அரசியல் ரீதியாக செயல்படுவதை பார்க்கிறோம். தி.மு.க. தலைவர் ஆலோசனைபடி சட்டசபை தலைவர் செயல்படுகிறார்.   நீதிமன்ற தீர்ப்பையே சபாநாயகர் மதிக்கவில்லை. சட்டமன்றம் என்பது வேறு, கட்சி என்பது வேறு. அதிகமான எம்எல்ஏக்கள் யாரை சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்கின்றனரோ அவர் முதல்வராக செயல்படுவார். அதுதான் நடைமுறை. அதேபோலத்தான் எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கும் தேர்வு செய்யப்படுவர். அதுதான் மரபு. அந்த மரபும், மாண்பும் இன்று சட்டப்பேரைவயில் சட்டப்பேரவைத் தலைவர் மூலம் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வை எதிர்கொள்ள முடியாத தி.மு.க. தலைவர் கொல்லைப்புறமாக, சட்டப்பேரவைத் தலைவர் மூலமாக எங்களை பழிவாங்கப் பார்க்கிறார். ஒருபோதும் நடக்காது. என்றைக்கும் நீதி, உண்மை, தர்மம்தான் வெல்லும். திமுகவிற்கு ஆதரவாக எங்கள் கட்சியின் உயர் பொறுப்பாளரே செயல்படுகிறார் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தது உண்மையாகிவிட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாகவும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாகவும் விசாரணை ஆணையத்தை அமைத்தது நாங்கள் தான். நாங்கள் அமைத்த விசாரணை ஆணையத்திற்கு அவர்களின் விளக்கம் தேவையில்லை. மக்கள் கொதிப்பில் உள்ளனர். இந்த ஆட்சி எப்ப போகும் என பார்த்து கொண்டுள்ளனர். இதனை மறைக்கவே இந்தி எதிராக தீர்மானம் கொண்டு வருகின்றனர்.