×

ஸ்டாலின் அரசு அதிகாரிகளை நம்பவில்லை; அமைச்சர்களை நம்பவில்லை- எடப்பாடி பழனிசாமி

 

பல்லடத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அவர்கள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியுடன் கோவை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக ஒட்டன்சத்திரத்தில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு சென்றார். இதனை அடுத்து பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்எஸ்எம் ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பல்லடம் பேருந்து நிலையம் அருகே உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதனையடுத்து பொதுமக்களிடம் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, “ஏதோ சூழ்நிலையில் திமுக ஆட்சி வெற்றி பெற்றுவிட்டது. ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் மு க ஸ்டாலின் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. பல்லடத்தில் புறவழி சாலைக்கு அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் திமுக அந்த திட்டத்தை ஒதுக்கி வைத்துள்ளது. இன்றைய ஆட்சியாளர்கள் குடும்ப வருமானத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது. நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் பணியாற்றும் பல லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முதல்வர் ஸ்டாலின் எல்லாவற்றிக்கும் குழு அமைத்து வருகிறார். இதுவரைக்கும் 38 குழு அமைத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அரசு அதிகாரிகளை நம்பவில்லை. அமைச்சர்களை நம்பவில்லை. ஆகையால்தான் குழு அமைத்து வருகிறார். மேலும் ஆட்சி அமைந்தவுடன் இல்லத்தரசிகளுக்கு 1000 கொடுக்கப்படும்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, கல்வி கடன் ரத்து செய்யப்பட்டு என தேர்தல் அறிக்கை அறிவித்தனர். இப்போது வரை எந்த ஒரு திட்டத்தை நிறைவேற்றவில்லை. மக்களுக்கு போனஸாசாக வீட்டு வரியையும், சொத்து வரி, மின்சார கட்டணத்தையும் உயர்த்தி உள்ளனர். இதை விட கேவலமாக ஆன்லைன் சூதாட்டம் அதிகமாக நடைபெற்று வருகிறது. அரசு சரியாக நீதிமன்றத்தில் சரியாக வாதாட முடியாததால் ஆன்லைன் சூதாட்டத்தில் முதலாளிக்கு சதாகமாக தீர்ப்பு வந்துவிட்டது. இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கும் குழு அமைத்து 4 மாதத்தில் சட்டம் இயற்றி தடை செய்வதாக கூறி முதல்வர் ஏமாற்றி வருகிறார்” என பேசினார்.