×

இன்று டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

 

குடியரசு தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது.  டெல்லியில் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டமன்றங்களிலும், வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குப்பெட்டிகள் நாடாளுமன்ற வளாகம் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

அந்த வகையில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து 5 லட்சத்து 77 ஆயிரத்து 777 வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹாவை தோற்கடித்தார்.இதன் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசு தலைவர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார். ஜூலை 25ம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு பாஜக சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது


இதனிடையே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இன்று  டெல்லியில் பிரியாவிடை  வழங்கப்பட உள்ளது.  நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இணைந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரியாவிடை அளிக்கவுள்ளனர்.  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வருகிற 24-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில் விருந்து உபச்சாரத்துடன் அவருக்கு விடை அளிக்கப்படுகிறது. 


இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இன்று நடைபெறும் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க டெல்லி செல்கிறார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அத்துடன் பாஜக தலைவர்களை சந்திக்கும் அவர்,அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல், தமிழக அரசியல் சூழல் குறித்து பேசுவார் என்று தெரிகிறது.