×

இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடிய ஈபிஎஸ்

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி,  ஈபிஎஸ் அணி என இரண்டாக  பிரிந்து தேர்தலை சந்திக்கின்றனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில்,  தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. 

 இந்த சூழலில் ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை வேட்பாளர்கள் அதிமுக சார்பில் அறிவிக்கப்படவில்லை. நேற்று எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் ஆணையம் இடைக்கால பொது செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க மறுக்கிறது என்றும் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

 ஈரோடு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.  ஒருவேளை முன்னதாகவே அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு வழங்க முடியுமா என்பதை பார்க்கலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ், மகேஷ்வரி அமர்வு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திங்கட்கிழமை முறையீடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.