×

ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக கருத வேண்டாம் - இபிஎஸ் கடிதம்

 

ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக கருத வேண்டாம் என மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். .இதேபோல் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, தங்கமணி உள்ளிட்டோர் அமைப்பு செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஓ.பன்னீர்செல்வம் மட்டுமின்றி அவருடைய மகன்கள், ஆதரவாளர்களான வைத்திலிங்கம், கோவை செல்வராஜ் உள்ளிட்டோரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றமும், அதிமுக அலுவலகம் எடப்பாடி பழனிசாமிக்கே சொந்தம் என  தீர்ப்பு வழங்கியது. 

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக கருத வேண்டாம் என மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதிமுக எம்.பியாக இருந்த ரவீந்திரநாத்தை கட்சியில் இருந்து நீக்கியதால் அவரை அதிமுக எம்.பி.யாக கருத கூடாது என அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவயில் ரவீந்திரநாத் மட்டுமே அதிமுக எம்.பியாக இருந்த நிலையில், தற்போது அவரும் நீக்கப்பட்டுள்ளதால் மக்களவையில் அதிமுக எம்.பிக்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது. இந்த கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டால் ரவீந்திரநாத் எம்.பி. எந்த கட்சியையும் சாராத உறுப்பினராக செயல்படுவார். இது சபாநாயகர் ஓம் பிர்லா எடுக்கும் முடிவை பொறுத்தது. இந்த நிலையில் இதற்கு பதில் கடிதம் ரவீந்திரநாத் சார்பில் எழுதபட்டு உள்ளது.