×

மின்கட்டண உயர்வு எதிர்ப்பை, லஞ்ச ஒழிப்பு துறை மூலம் திசை திருப்பும் திமுக  - இபிஎஸ் குற்றசாட்டு..

 

மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை,  லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப திமுக அரசு நினைப்பதாக  அதிமுக இடைக்கால பொதுச்செய்லாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும்,   தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதாகவும் எஸ். பி. வேலுமணி மீது புகார் எழுந்தது.  அதன் அடிப்படையில் அவருக்கு தொடர்புடைய 26 இடங்களிலும்,  அவரது நண்பர் சந்திரசேகர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  இதேபோல் தேசிய மருத்துவக் குழு விதிக்கு  முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு சி. விஜயபாஸ்கர் முறைகேடாக சான்று தந்ததாக புகார் எழுந்ததையடுத்து,  அது தொடர்பான  ஆவணங்களை கைப்பற்ற சென்னை, சேலம், மதுரை,  தேனி,  புதுக்கோட்டை,  திருவள்ளூர் என 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.


 
இதற்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, “மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து, ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 7பேரையும்,கழக தொண்டர்களையும், சர்வாதிகார போக்குடன் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன், கைது செய்யப்பட்டுள்ள அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.