×

ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் திட்டம்

 

நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை நீக்குவதற்கு சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த ஆவணங்களை நேற்றைய தினமே ஆன்லைன் வாயிலாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதே போல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் முடிவின்றி சட்டத்திற்கு புறம்பாக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கக் கூடாது என ஓ பன்னீர்செல்வம் தரப்பிலும் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அனுப்பப்பட்டது. இருவரின் மனுக்களையும் பரிசீலனை செய்து வரும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் விரைவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணையின் போது கூடுதல் ஆவணங்களை ஒப்படைக்க இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் கேட்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

ஏற்கனவே இரண்டு தரப்பினரும் ஈமெயில் மூலமாக தான் தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்திருக்கிறார்கள். அதன் அசல் கடிதங்களை இரு தரப்பினரும் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கவும் இருக்கிறார்கள்.  அசல் ஆவணங்கள் கிடைத்தபிறகு இந்திய தேர்தல் ஆணையம் ஈபிஎஸ் மற்றும் ஒ.பி.எஸ் தரவிற்கு நோட்டீஸ் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு தலைவர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் விரைவில் நோட்டீஸ் வழங்கப்பட்டு இருவர் தரப்பிலும் வழக்கறிஞர் மூலமாகவோ அல்லது இருவரும் நேரடியாகவோ ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கங்களை அளிப்பார்கள்.