×

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த விவகாரத்தில் திமுகவுக்கு சம்பந்தமில்லை - துரைமுருகன்

 

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த விவகாரத்தில் திமுகவுக்கு சம்பந்தமில்லை, ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடியும் எங்களுக்கும் சமமானவர்களே அவர்களின் தயவு திமுகவுக்கு தேவையில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் புதிய பேருந்து நிலையம் ரூ.53 கோடியில் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் கடந்த ஜூன் 29-ம் தேதி துவங்கப்பட்டது. இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று சென்னைக்கு பேருந்து போக்குவரத்தை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆணையர் அசோக்குமார், மேயர் சுஜாதா மற்றும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வருவதில் நிறைய இடையூறு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவருக்கு இதெல்லாம் நியாபகம் இருக்கிறது. கண்டலேறுவிலிருந்து கால்வாய் வழியாக தண்ணீர் செல்லும் போது கால்வாயின் வழியாக தண்ணீரை அங்குள்ளவர்கள் எடுத்துகொள்கின்றனர். அதிமுக அலுவலகம் சீல் வைப்பு என்பதில் பன்னீர் செல்வமும் எங்களுக்கு ஒன்று தான். பழனிசாமியும் ஒன்றுதான். எங்களுக்கு இருவரின் தயவும் தேவையில்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் விதிமுறைப்படி விழா அழைப்பிதழில் பெயரை போட்டிருக்க வேண்டும் ஆனால் அதனை பின்பற்றப்படவில்லை. ஆளுநர் சனாதன தர்ம பற்றி பேசுகிறார் என்றால் அவர் சனாதனவாதி, தமிழ்நாட்டில் கொரோனா கட்டுபாட்டில் இருந்தது. ஆனால் இப்போது கட்டுபாட்டை மீறி வருகிறது, ஆனாலும் பழைய வேகமில்லை. கொரோனாவால் பாதிக்கபடுபவர்கள் இரண்டு நாட்களில் சரியாகி விடுகின்றனர்” எனக் கூறினார்.