×

"தமிழக ஆளுநர் அண்ணாமலையின் பார்ட்-டூ" - துரை வைகோ விமர்சனம்

 

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவிலில் தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ சாமி தரிசனம் செய்தார். அப்போது பல்வேறு தரப்பினரும் அவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


அந்தக் கோரிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்து, சங்கரன்கோவில் கோயில் தொடர்பான கோரிக்கைகளை கொடுத்தார்.  அமைச்சர் அவர்களும், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்த தகவலை பட்டர்கள், பக்தர்கள், ஊழியர்கள், மண்டகப்படிதாரர்களிடம் துரை வைகோ பகிர்ந்து கொண்டார்.  

பின்பு செய்தியாளர்களை சந்தித்த துரைவைகோ, “பக்தர்கள் கொடுத்த கோரிக்கைகளை இந்து சமயஅறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களிடம் கொடுத்தேன்.  அதனைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். அதை மனு கொடுத்தவர்களிடம் தெரிவிப்பதற்காக வந்திருக்கிறேன். சங்கரநாராய சுவாமி கோவிலில் 1000 வது ஆண்டு விழாவை நடத்தப்படும் என கூறியிருக்கிறார்கள். விரைவாக குடமுழுக்கு பணிகளை துவங்கிட துரித நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள், அடிப்படை வசதிகள் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என கூறியுள்ளார்கள்.

ஆளுநர் தமிழக ஆளுநராக செயல்படவில்லை, பாஜகவின் ஊதுகுழளாக செயல்படுகிறார். அண்ணாமலை பார்ட் 2-வாக செயல்படுகிறார். வைகோ உள்ளத்திலும் உடலிலும் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார், அவருக்கு எந்த குறைபாடும் இல்லை. குஜராத் பால விபத்தில் 135 பேரில் 56 குழந்தைகள் இறந்துள்ளனர். பாலம் காண்ட்ராக்டரை பொறுத்தவரையில் தனியாருக்கு வழங்கியுள்ளனர். பராமரிப்பு முடிந்து மூன்று நாட்களுக்கு பின் இந்த விபத்து நடந்துள்ளது. அந்த கம்பெனி அஜந்தா வாட்ச் கம்பெனி. கடிகாரம், ஃபேன் தயாரிக்க கூடிய கம்பெனிக்கு பாலங்களை பராமரிக்கும் அனுபவம் இல்லாத கம்பெனியிடம் இந்த வேலையை கொடுத்துள்ளார்கள். இது மிகத் தவறானது. பாஜக ஆளும் குஜராத் அரசாங்கத்தின் அஜாக்கிரதையால் நடந்த விபத்து” எனக் கூறினார்.