×

குடியரசு தினக் கொண்டாட்டம்- சென்னையில் டிரோன்கள் பறக்க தடை

 

குடியரசு தின விழாவை ஒட்டி சென்னையில் 6,800 போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட உள்ளதாகவும், 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் டிரோன்கள் பறக்க தடை எனவும் சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வருகிற 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே தமிழ்நாடு கவர்னர் தேசியக்கொடி ஏற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி அங்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தினத்தையொட்டி சென்னையில் மொத்தம் 6,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

முக்கிய ரயில் நிலையங்கள்,  பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிப்பாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தங்கும் விடுதிகள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் சந்தேகப்படும் படியான நபர்கள் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை எல்லைக்குட்பட்ட இடங்களான திருவொற்றியூர், மீனம்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், கோயம்பேடு, மாதவரம் பேருந்து முனையங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்களுடன் இணைந்து சோதனைகள் மேற்கொண்டுவருகின்றனர். 

குடியரசு தினத்தை ஒட்டி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பறக்கவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.