×

சென்னை மாநகராட்சி சார்பில் ட்ரோன்கள், 200 கைத்தெளிப்பான்கள் கொள்முதல்..  கொசுவை ஒழிக்க நடவடிக்கை..

 

சென்னை மாநகராட்சி சார்பில் கொசு மற்றும் புழுக்களை ஒழிக்கும் 6 ட்ரோன் இயந்திரங்கள் உட்பட 200 கைத்தெளிப்பான்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.  

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  கொசுக்களை ஒழிக்க  மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில்,  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கையினால் இயங்கும் 229 புகைப்பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்களைக்  கொண்டு கொசு ஒழிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதேபோல்,  குடிசைப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் போன்ற இடங்களில் புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்கள் அழிக்கப்படுகின்றன. மேலும்,  திறந்த நிலையில் உள்ள கிணறுகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள், வணிகக் கட்டடங்கள் மற்றும் காலிமனைகள் ஆகிய இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு கொசுப்புழு வளரும் இடங்கள் அழிக்கும் பணியை  சென்னை மாநகராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும்  மனிதர்கள் செல்ல கடினமாக இருக்கும் பாதைகளில் கொசு மற்றும் புழுக்களை ஒழிக்க ட்ரோன்கள் வாங்க திட்டமிடப்பட்டது. அதன்படி,  ரூ.798 லட்சம் மதிப்பில் 6 ட்ரோன்கள் 200 மருந்து தெளிப்பான்கள் வாங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் வாடகைக்கு ட்ரான் வாங்கி சோதனை முறையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சொந்தமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.    இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா, துணை மேயர், முதன்மைச் செயலாளர் மற்றும்  நிலைக்குழுத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்