×

குடிநீருடன் கலக்கும் சாக்கடை நீர்...அசோக்நகரில் வீணாகும் தண்ணீர்!

 

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் 71 கிலோ மீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.  மேலும் பல இடங்களில் மழைநீர் வடிகால்கள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றனர்.  பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது.  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவதாஸ் மீனா , சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங்  பங்கேற்றனர். 

ஒவ்வொரு பகுதியிலும் புதிய மழைநீர் வடிகால் பணிகள் முடிந்தவுடன் அந்த மழைநீர் வடிகால்களில் உள்ள கட்டுமான கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.  மழைநீர் வடிக்கால்  தூர்வாரும் பணிகளின் போது வண்டல் மண்ணை அகற்றி அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வளாகங்களில் கொட்ட வேண்டும்.கடந்த காலங்களில் மழை நீர் தேங்கும் 400 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் மழைநீரை வெளியேற்றுவதற்காக 400 மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேசமயம் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்களால் விபத்துகளும், குடிநீரும் வீணாகி வருகின்றன. இந்நிலையில் அசோக்நகர் 16வது அவென்யூ மற்றும் 18வது அவென்யூ சந்திப்பில் குடிநீர் மற்றும் வடிகால் கலக்கிறது.மழைநீர் வடிகால் தோண்டும் போது இரண்டு குழாய்களும் சேதமடைந்தன. இதனால் குடிநீர், கால்வாய் நீருடன் கலந்து வீணாகி வருகிறது. இதை மாநகராட்சி ஊழியர்கள் உடனே சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.