×

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

 

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டானர். இந்த தேர்தலை எதிர்த்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றாத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி கார்த்திகேயன் முன்பு  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் உட்கட்சி விவகாரம் குறித்து வழக்கு தொடர முடியாது என்பதால், கே.சி .பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

அப்போது, கே.சி. பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கே.சி.பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கியது குறித்து, அவருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை. எனவே இந்த நீக்கம் செல்லாது என வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, உட்கட்சி தேர்தலை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய கே.சி.பழனிசாமி தகுதியில்லை என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.