×

ஆசிரியரை தாக்கிய மாணவிகள் - உடந்தையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் பணியிடை மாற்றம்

 

திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரை அடுத்த ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் பெண் ஆசிரியரை தாக்கிய சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த கோவிலூர் அருகே உள்ளது கோ.ராமநாதபுரம். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1,500 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதனிடையே  அரசுப் பள்ளியில் கூடுதல் கல்வி கட்டணம் வசூல் செய்வதாகவும்,  அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என வலியுறுத்தி பள்ளி  மாணவ, மாணவிகள் கோவிலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் தான் காரணம் எனவும், அவரது தூண்டுதலின் பேரில் தான் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 


 
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர். இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்  ஐந்து மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு அறைக்கு சென்று போராட்டத்திற்கு வராத மாணவிகளிடம் தகராறு செய்ததோடு அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.  இதனை வகுப்பறையில் இருந்த ஆசிரியர் பொன்மேரி தடுத்துள்ளார் ஆனால் அவரையும் மாணவிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதேபோல் ஆசிரியர் அய்யாகண்ணுவையும் மாணவர்கள் தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த சக ஆசிரியர்கள் இந்தப் பிரச்சினைக்கு மூல காரணமான உடற்கல்வி ஆசிரியர் முனியப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  மாவட்ட முதன்மை கல்வி  அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் புகாரின் பேரில் உடற்கல்வி ஆசிரியர் முனியப்பனை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் லிங்கவாடி பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி உத்தரவிட்டுள்ளார்.