×

மாற்றுத் திறனாளிகள் ஏறும் வகையில் பேருந்துகளின் பின்புறன் சாய்தள பாதை அமைப்பதில் சிக்கல்

 

மாற்றுத் திறனாளிகள் ஏறும் வகையில் பேருந்துகளின் பின்புறன் சாய்தள பாதை அமைப்பதில் தொழில்நுட்பரீதியாக சிக்கல்கள் உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக ஆயிரத்து 107 பேருந்துகள் கொள்முதல் செய்ய  டெண்டரில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில், தாழ்தள பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பேருந்துகளின் பின்புறம் மாற்றுத் திறனாளிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் மட்டும் சாய்தளம் பாதை அமைக்க முடியுமா என்பது குறித்து தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், பேருந்தின் பின்புறம் சாய்தளப்பாதை அமைப்பதால் பேருந்து இயக்குவதில் சிரமம் ஏற்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதேசமயம் 900 மற்றும் 650 மில்லி மீட்டர் உயரம் கொண்ட தளங்களுடன் கூடிய பேருந்துகளை விற்பனை செய்ய உற்பத்தி நிறுவனங்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால் 400 மில்லி மீட்டர் உயரத்திலான தாழ்தள பேருந்துகளை விற்பதற்கு ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே தயாராக இருப்பதாகவும், மற்ற நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

900 மில்லி மீட்டர் உடைய பேருந்துகளாக இருந்தால் லிப்ட் வசதியுடன் அமைக்க முடியும் என்றும், 650 மில்லி மீட்டர் உயரமுடைய பேருந்தாக இருந்தால் சாய்தள வசதியுடன்  அமைக்க முடியும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பேருந்து கொள்முதல் தொடர்பான டெண்டர் பிப்ரவரி 15ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த ஏதுவான பேருந்துகளைதான் அரசு கொள்முதல் செய்ய வேண்டுமெனவும், ஏதோ ஒரு பேருந்தை வழங்கிவிட்டு அதில் தான் பயணிக்க வேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது என்றும் வாதிடப்பட்டது. ஒரே நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் தாழ்தள பேருந்துகளாக இயக்க வேண்டுமென வலியுறுத்திவில்லை என்றும், 10 சதவீதத்திற்கும் குறைவான பேருந்துகளைத்தான் இயக்க கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இருவகையான பேருந்துகளும் எவ்வாறு மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதுவாக இயக்கப்படும் என்பது தொடர்பான செய்முறை விளக்கத்தை வழங்கும்படி  அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர். தாழ்தள பேருந்துகள் வரும் நேரத்தை தெரிவிக்கும் செயலியை அறிமுகப்படுத்த அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.