×

வேல்ஸ் மருத்துவமனைக்கு சான்று வழங்கியபோது குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன- டீன் பாலாஜி

 

கடந்த  அதிமுக ஆட்சியின் போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேல்ஸ் மருத்துவமனைக்கு விதிமுறைக்கு மீறி அனுமதி வழங்கியதாக முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரின் மீது லஞ்ச ஒழிப்பு புகார் எழுந்த நிலையில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரது வீடுகள் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 13-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அதன் ஒரு பகுதியாக  அப்போது சேலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக இருந்தவரும் தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக உள்ள பாலாஜி நாதனின் குடியிருப்பு பகுதியில் இன்று காலை 7  மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறை சார் ஆறு பேர் கொண்ட குழுவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர் . 

சோதனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பாலாஜி நாதன், “வேல்ஸ் மருத்துவமனைக்கு சான்று வழங்கியபோது குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. அதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் டாக்குமெண்டாக எழுதிக் கொடுத்து சென்று இருக்கிறார்கள். வேல்ஸ் மருத்துவமனை துவங்கும் போது தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுவில் நான் இருந்ததால் இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். 8 மணி நேரமாக முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். வேல்ஸ் மருத்துவமனை துவங்கும் போது சான்று வழங்கிய நேரத்தில் கட்டிடங்கள் அளவு குறைவாக இருக்கிறது. குறைபாடாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டி தான் சான்று வழங்கி இருக்கிறோம்” எனக் கூறினார்.