×

ஆரஞ்சு பால் விலை உயர்வை குறைக்க வேண்டும்  - டிடிவி தினகரன் வலியுறுத்தல்.. 

 

ஆவினில் உயர்த்தப்பட்ட  ஆரஞ்சு பால் விலையை குறைக்க  வேண்டும் என்றும், மற்ற பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தக்கூடாது என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ஆவின் ஆரஞ்சு பால் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டு ,  இனி லிட்டர் ரூ. 60 க்கு விற்கப்படும் என்று   ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை  உயர்வு வழங்குவதால் ஏற்படுகின்ற கூடுதல் செலவினத்தை ஈடு செய்வதற்காக இந்த விலை உயர்வு என்று ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.  அதே நேரம் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழக்கம் போல் ஆவின் ஆரஞ்சு பால் விலை  லிட்டருக்கு  46 ரூபாய்க்கே    மாற்றம் இன்றி வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.

பால் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “ஆவின் ஆரஞ்சு பால் விலையை தி.மு.க அரசு திடீரென உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 சேர்த்து கொடுப்பதாகக் கூறிவிட்டு, விற்பனை விலையில் லிட்டருக்கு ரூ.12 அதிகப்படுத்தியிருக்கிறார்கள். மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த மக்கள் விரோத தி.மு.க அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  உயர்த்தப்பட்ட ஆரஞ்சு பால் விலையைக் குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக்கூடாது என தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.” என்று  குறிப்பிட்டுள்ளார்.