×

ஆளுநர் விவகாரம்- குடியரசுத் தலைவரை சந்திக்க திமுக திட்டம்

 

சட்டமன்றத்தை ஆளுநர் அவமதித்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளது.

இதற்காக திமுக சார்பில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் டெல்லிக்கு செல்கின்றனர். சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடுவதற்கு முன், ஆளுநர் வெளியேறியது குறித்து குடியரசித்தலைவரிடம் புகார் அளிக்க உள்ளனர். ஆளுநர் உரையில் சில பகுதிகளை தவிர்த்தது தொடர்பாகவும் நாளை குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து புகார் கூறவுள்ளனர். சட்டப்பேரவையின் மரபை மீறியதாக ஆளுநர் மீது திமுகவினர் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று கூடியது. அப்போது, திமுக அரசு கொடுத்த உரையில் இருந்த, திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர், கருணாநிதி உள்ளிட்ட பெயர்களை படிக்காமல் ஒரு பத்தியையே விட்டுவிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி படித்ததாக திமுகவினர் குற்றஞ்சாட்டினர். இதனால் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் முன்னிலையிலேயே தீர்மானம் கொண்டுவந்தார். இதனால் கோபமடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கு முன்பே பேரவையில் இருந்து வெளியேறினார். தேசியகீதம் இசைக்காமல் ஆளுநர் வெளியேறியது அவை மரபை சீர்குலைப்பதாக முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

 ஆனால் பாஜகவோ, தமிழ்நாடு சட்டமன்ற விதிகளில் அத்தியாயம் 4ல் குறிப்பிட்டுள்ளபடி, அரசியலமைப்பு சட்டத்தின் 175, 176ன் பிரிவின் படி, அவை கூடியிருக்கும் போது ஆளுநர் உரை நிகழ்த்துகையிலோ, நிகழ்த்துவதற்கு முன்னரோ, பின்னரோ,உறுப்பினர் எவரும் தமது பேச்சினாலோ, வேறு எவ்வகையிலோ தடுக்கவோ, குறுக்கீடு செய்யக்கூடாது எனக் கூறி முதலமைச்சர்தான் அவையின் மரபை மீறியதாக குற்றஞ்சாட்டிவருகிறது,