×

தமிழகத்தின் வரலாறு தெரியாதவர்கள் பாஜகவில் பதவியில் உள்ளனர் - ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

 

தமிழகத்தின் வரலாறு தெரியாதவர்கள் தான், பாஜகவில் பதவியில் உள்ளனர் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 
 

மதுரை கோரிப்பாளையத்தில் திமுக சார்பில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஜவஹர்லால் நேருவை மிரள வைத்தது திமுக. தாய்மொழி தமிழுக்கு பாதிப்பு என்றால் திமுக யாரை வேண்டுமானாலும் எதிர்க்கும். மதுரையில் தான் முதன் முதலில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தோம்.

பாஜகவில் வரலாறு தெரியாதவர்கள் பதவியில் உள்ளனர். தமிழகத்தில் இந்தி பேசாமல் இருப்பது மத்தியில் ஆள்பவர்களுக்கு தமிழகம் தனி தீவாக காட்சியக்கிறது. இந்தியை எதிர்த்து சட்டத்தை எரித்த 10 எம்.எல்.ஏ-க்களை எம்.ஜி.ஆர் பதவி நீக்கம் செய்தார். இந்தியை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

தமிழக அரசு கொண்டு வந்த இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை முன் மொழிந்து மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் தீர்மானம் கொண்டு வர உள்ளனர். இந்தியாவில் இந்தியை எதிர்க்கும் தகுதி கொண்ட ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக எந்தவொரு கட்சியும் வர முடியாது, யாருக்கும் இடமும் கிடையாது. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் உள்ளனர், திமுகவை யாராலும் அழிக்க முடியாது. இவ்வாறு கூறினார்.