×

"இது தான்டா திமுக".. SP வேலுமணி கோட்டையில் பறக்கும் கறுப்பு, சிவப்பு கொடி.. சொல்லாததையும் செய்த ஸ்டாலின்!

 

கொங்கு மண்டலங்களை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தான் குறுநில மன்னர்கள் போல் ஆட்சி செய்தனர். அவர்கள் கோட்டைக்குள் யாரையும் நுழையவிட மாட்டோம் என கங்கணம் கட்டி செயல்பட்டனர். குறிப்பாக கோயம்புத்தூரில் எல்லாமே நான் தான் என்பது போல எஸ்பி வேலுமணி மார்தட்டி சொன்னார். அவருடைய சொந்த தொகுதியான தொண்டாமுத்தூரில் அவரை விஞ்ச ஆளே இல்லை என்றே சொல்லப்பட்டது. அந்த எஃகு கோட்டையை உடைத்தெறிய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வியூகம் வகுத்தார்.

அடிக்கடி தொண்டாமுத்தூருக்கு விசிட் அடித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஒரு பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், "வேலுமணி தான் கொங்கில் 21 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர் என்று சொன்னார். 21 தொகுதிகளையும் பார்த்துக் கொள்கிறேன் என்றார். ஆனால், தற்போது ஒரே தொகுதியில் அவரை முடக்கி உள்ளோம். இதுதான்டா திமுக. பதவி போன பிறகு, 'உங்களுடைய ஆட்டத்தை எப்படி ஆட்டப் போறோம்னு பாருங்க. ஒவ்வொரு தொண்டனும் வெறித்தனமா இருக்காங்க. 

கழகத் தோழர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு எப்படி கொடுமை படுத்துனீங்க. நாங்கள் மறக்க மாட்டோம். நானே தலையிடுவேன்” என்றார். அதேபோல ஆட்சிக்கு வந்தவுடனே அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தினார். சில நாட்களுக்கு முன்பு கூட தர்ணாவில் ஈடுபட்ட வேலுமணியை போலீசார் அலேக்காக தூக்கிச் சென்றனர். அப்போதே அவரின் பல் பிடுங்கப்பட்டுவிட்டது கண்கூடாக தெரிந்தது. இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. அவர் எம்எல்ஏவாக உள்ள தொண்டாமுத்தூர் பேரூராட்சியை வாரி சுருட்டியிருக்கிறது திமுக.

அங்குள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளைக் கைப்பற்றி அதிரிபுதிரி வெற்றிபெற்றுள்ளது திமுக. வேலுமணியின் கோட்டை அசைக்க முடியாது என அதிமுகவினர் கர்ஜித்த நிலையில் அந்தக் கோட்டையில் கொடி நாட்டியிருக்கிறது திமுக. அதற்கு முழுக் காரணமும் செந்தில்பாலாஜி தான். அவர் இறங்கி வேலை செய்து வேலுமணியை மண்ணை கவ்வ வைத்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் கோவையில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத திமுக, அப்போது இருந்தே இங்கே கவனம் செலுத்தியது. முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி விசிட் அடித்து பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தார். இதெல்லாம் தான் அங்கே பெருவெற்றியைப் பெற்றதற்கு காரணமாக அமைந்துள்ளன.