×

காற்றழுத்த தாழ்வு மண்டலம் - துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

 

வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம்  தென்கிழக்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டியுள்ள  பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று  காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று அதே பகுதிகளில் நிலவி வந்தது.  பின்னர்  இது மேற்கு - வடமேற்கு  திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.  இது மேலும் அடுத்த 48 மணி நேரத்தில்  ( இரண்டு தினங்களில்)  மேற்கு - வடமேற்கு  திசையில் தமிழக மற்றும் புதுச்சேரி  மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்  என வானிலை மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக எண்ணூர், நாகை, கடலூர் துறைமுகங்களில் இன்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. மேலும் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.