×

"இணைய வழி குற்றங்களை கண்டுபிடிக்க சமூக ஊடகக் குழுக்கள்" - தமிழக டிஜிபி அறிவிப்பு 

 

இணைய வழி குற்றங்களில் ஈடுபடுவோரையும் எளிதில் கண்டுபிடிக்க தேவை ஏற்பட்டுள்ளது என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், யூ-டியூப், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடங்களில் பொய்யானத் தகவல்களை பதிவு செய்து வதந்திகளை பரப்பி அதன் மூலம் குழப்பங்களையும், சண்டைகளையும், கலவரங்களையும் காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

இதுபோல, இணைய வழி பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் விற்பனை, பண மோசடி போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரையும் எளிதில் கண்டுபிடிக்க தேவை ஏற்பட்டுள்ளது.  இதற்காக சென்னை உள்பட 9 மாநகரங்களிலும், 37 மாவட்டங்களிலும் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்களைக் கொண்ட சமூக ஊடகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையின் கீழ் இயங்கும் இந்தக் குழுவில் கணினி சார் திறன், சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. பொய்யான பதிவுகளை பரப்புவோரை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுபிடித்து தடுக்கவும் அவர்களது கணக்குகளை முடக்கவும் இக்குழு துரிதமாக செயல்படும் .இந்த நடவடிக்கையின் மூலம் சாதி, மத அரசியல் மோதல்களைத் தடுத்திடவும் இக்குழு உதவும்" என்று குறிப்பிட்டுள்ளார்.