×

ரூ.1.33 கோடி மதிப்பிலான 3 கிலோ தங்கம் நூதனமுறையில் கடத்தல்- இருவர் கைது

 

ஓமன் நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.33 கோடி மதிப்புடைய, 3 கிலோ தங்க ஸ்பிரிங்குகள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்.சூட்கேஸ் ரப்பா் பீடிங்குக்குள் மறைத்து வைத்து, தங்க ஸ்பிரிங்குகளை கொண்டுவந்த சென்னை பயணிகள் இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

ஓமன் நாட்டு தலைநகா் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம்  சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த இரண்டு ஆண் பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.  இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அவர்கள் இருவரின் உடைமைகளை முழுமையாக சோதித்தனர். உடமைகளில் ஏதும் சிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் கொண்டு வந்திருந்த டிராலி டைப் சூட்கேஸ்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து இரண்டு பேருடைய சூட்கேஸ்களையும் ஆய்வு செய்தனர். 

அந்த சூட்கேஸ்களை சுற்றி, அமைக்கப்பட்டுள்ள ரப்பர் பீல்டிங்கை பிரித்துப் பார்த்தனா். அதற்குள் தங்க ஸ்ப்ரிங்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பேருடைய சூட்கேஷ்களிலும் இருந்து மொத்தம் மூன்று கிலோ தங்க ஸ்ப்ரிங்குகளை சுங்க அதிகாரிகள் கண்டுப்பிடித்து எடுத்தனா்.அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 1.33 கோடி. 



இதை அடுத்து சுங்க அதிகாரிகள் சென்னை பயணிகள் இருவரையும் கைது செய்தனர். அதோடு தங்க ஸ்ப்ரிங்குகளையும் பறிமுதல் செய்தனர். இதை அடுத்து இரண்டு பயணிகளிடமும் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இந்த தங்க ஸ்ப்ரிங்குகளை யாருக்காக கடத்தி வருகின்றனர். இவர்களை கடத்தலுக்கு அனுப்பியவா்கள் யார்? இவர்களுக்கும் சர்வதேச கடத்தல் தங்கும் கடத்தும் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.