×

கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த ஆயுதப்படை காவலர் சஸ்பெண்ட்

 

கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் கணேஷ்குமாரை சஸ்பெண்ட செய்து கோவை கமிஷனர் பிரதீப்குமார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை அறந்தாங்கி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது கோவை ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வரும் கணேஷ்குமார் என்பவர் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அறந்தாங்கியில் இருந்து கோவை வந்த தனிப்படை போலீசார், கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள கணேஷ் குமாரின் வீட்டைச் சோதனையிட்டனர். அப்போது வீட்டில் இருந்து சிறிதளவு கஞ்சா மற்றும் சில பொருட்களை கைப்பற்றியதுடன் கணேஷ்குமாரை கைது செய்து புதுக்கோட்டை அழைத்துச் சென்றனர். இந்நிலையில் கணேஷ் குமாரை கைது செய்திருப்பது தொடர்பான ஆவணங்களை கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமாரிடம் புதுக்கோட்டை மாவட்ட போலீசார் வழங்கினர். இதனைத் தொடர்ந்து ஆயுதப்படை காவலர் கணேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.