×

அதிகரிக்கும் கொரோனா - தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!!

 

சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 111ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. அந்த வகையில்  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.    இதனால், இதுவரை தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 37 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது . கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பாக நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது . அதில்பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, இதன்மூலம் சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 3,080 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் 109 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்பது போன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்; தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் கொரோனாவை  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கொரோனாவை தடுக்க முகக்கவசம் தொடர்ந்து  அணிந்து வரவேண்டும்.  தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா பரவல் இல்லாவிட்டாலும் பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது" என்றார்.