×

நடத்துநர்கள் பணியின் போது செல்போன் பார்க்கவோ, தூங்கவோ கூடாது!

 

நடத்துநர்கள் பணியின் போது செல்போனில் நிகழ்வுகளை பார்ப்பது மற்றும் உறங்குவதை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நடத்துனர்கள் பயணச்சீட்டு வழங்கிவிட்டு முன்புற இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போனில் நிகழ்வுகளை பார்த்த வண்ணம் அல்லது உறங்கிய வண்ணம் இருப்பதாக பயணிகளிடம் இருந்தும் மற்றும் பயிற்சிக்கு வரும் ஓட்டுநர்களாலும் புகார்கள் பெறப்பட்டுள்ளது. இச்செயல் மிகவும் வருந்தத்தக்கதாகும். எனவே நமது நடத்துனர்கள் பகல் பணியின்போது பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிவிட்டு பயணிகளின் பாதுகாப்பு மற்றும் தங்களது பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் பேருந்துகளின் இரு படிக்கட்டுகளும் தங்களது பார்வையின் கட்டுப்பாட்டில் இருக்கும்படி பேருந்தின் பின் இருக்கையை பணிபுரிய அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் இரவு நேர நீண்ட தூர வழித்தடங்களில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கி விட்டு சக ஓட்டுநரை ஊக்குவிக்கும் வகையில் பேருந்தின் முன் இருக்கையில் அமர்ந்து ஓட்டுநர்க்கு உறுதுணையாக பணியின் போது விழிப்புணர்வுடன் பேருந்தை இயக்கும் வண்ணம் நடந்து கொள்ளவும் செல்போனில் நிகழ்வுகளை பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பேருந்து வழித்தட பரிசோதனையின் போது மேற்கண்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் சம்மந்தப்பட்ட பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இதனை அனைத்து கிளை மேலாளர்களும் தங்களது கிளையின் நடத்துனர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.