×

அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யக்கோரி போலீசில் புகார்

 

பெண்களை இழிவாக பேசிய பாஜக ஓ.பி .சி  பொதுச் செயலாளர் சூர்யா சிவா மீதும், தெரிந்தே குற்றத்தை மறைத்த பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அண்ணாநகர் காவல்நிலையத்தில்  அளித்துள்ள மனுவில், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில், பாரதீய ஜனதா கட்சியின் தமிழக ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திரு.சூர்யா சிவா என்பவர், பா ஜ க சிறுபான்மை அணி தலைவி மருத்துவர் டெய்சி சரண் என்பவரை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியானது.  சூர்யா சிவா பேச்சு, இந்திய தண்டனை சட்ட பிரிவுகள்.153-A, 294(b), 505(2), 506(i), 509  & Sec. 3,4 & 6- இன் கீழ் கடும் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

ஓபிசி சமூகத்தை, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் மீது ஏவி விடுவேன் என்பது, சமூகத்தின் இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டுவதுடன், பொது அமைதியை சீர்குலைக்க வன்முறையைத் தூண்டுவதாகும். பெண்களை மிகக் கேவலமாக இழிவுபடுத்தும் , வன்முறையைத் தூண்டும், கொலை மிரட்டல் பேச்சு, தன்டனைக்குரிய குற்றம் என்று தெரிந்திருந்தும் கடந்த 15 நாட்களாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்ற சம்பவத்திற்கு புகார் கொடுக்காதது மற்றும் கொடுக்கச் சொல்லாதது, தெரிந்தே குற்றத்தை மறைக்கும், குற்றச் செயலாகும்.

மேற்கண்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பா ஜ க ஓபிசி பிரிவு மாநில செயலாளர் திரு.சூர்யா சிவா, குற்றத்தை தெரிந்தே மறைத்த  பா ஜ க மாநில தலைவர் திரு.அண்ணாமலை ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்  தெரிவித்துள்ளார்.