×

செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரியில் சீட் வழங்குவதில் முறைகேடு என புகார்

 

செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் 2022மற்றும் 2023கல்வி ஆண்டிற்கான புதிய  மாணவ மாணவிகளின் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 1-மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில் கல்லூரி முதல்வர் தலைமையில் 10-பேர் கொண்ட கலந்தாய்வு குழுவினர் மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் மாணவர்கள் விருப்பப்படி கேட்கும் பாடப்பிரிவு கிடைக்கவில்லை என்றும் கலந்தாய்வு முடிவடையும் நிலையில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விண்ணப்பித்த மாணவ மாணவிகளுக்கு விரும்பிய பாடப்பிரிவை அளிக்காமல் குறைந்த மதிப்பெண் பெற்ற கல்லூரியில் விண்ணப்பமே அளிக்காத ஒருசில மாணவ மாணவிகளுக்கு சீட் அளித்து கல்லூரி நிர்வாகம் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. காலையில் இருந்து மாணவர்கள் மற்றும் பெற்றோரை அமரவைத்து அங்கும் இங்குமாக அலைக்கழித்து இறுதியாக சீட் எல்லாம் முடிந்துவிட்டது என கூறியதாகவும் தெரிகிறது.

தனியார் கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கான வசதியில்லாத காரணத்தால் இந்த இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரியில் பயில வேண்டிய கட்டாயத்தில் வேறுவழியின்றி ஆசையோடும் கனவுகளோடும் காத்திருந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களோடு இதுவரை 6-முறை கலந்தாய்வில் கலந்து கொண்டு இறுதியாக ஏமாற்றமடைந்த மாணவிகள் கண்ணீர் விட்டு அழுததோடு மட்டுமல்லாமல் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உள்பட கல்லூரி முதல்வர் மற்றும் கலந்தாய்வு குழுவினரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.