×

சேதமடைந்த விடுதி மேற்கூரையை சீரமைத்து தர கோரி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

 

சேதமடைந்து உள்ள அரசு கல்லூரி விடுதி மேற்கூரை மற்றும் கழிவறைகளை சீரமைத்து தர வலியுறுத்தி நாமக்கல்லில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவ, மாணவிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் மோகனூர் சாலையில் லத்துவாடி என்ற இடத்தில் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி அருகே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி உள்ளது. இதில் சுமார் 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். தற்போது  இந்த விடுதியின் மேற்கூரை மற்றும் கழிவறை உள்ளிட்டவை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.இது குறித்து கல்லூரி முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம்  மாணவர்கள் அமைப்பு சார்பில் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 

இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு மாணவ, மாணவிகள் சுமார் 1000 த்திற்க்கும் மேற்பட்டோர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மரகதவல்லி மோகனூர் வட்டாட்சியர் தங்கராசு மற்றும் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபடாததால் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.