×

உயிரிழந்த பண்ரூட்டி கபடி வீரரின் குடும்பத்திற்கு நிவாரணம்  -  முதலமைச்சர் அறிவிப்பு..

 

கடலூர் மாவட்டம் பண்ரூட்டியில் கபடி விளையாட்டின்போது உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு  நிவாரணம் அறிவித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் பெரியபுறங்கணியைச்  சேர்ந்தவர் சஞ்சய் (எ) விமல்ராஜ்.   சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2 ஆம் ஆண்டு படித்து வந்த அவர்,   விளையாட்டு  அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்த போது தவறி  கீழே விழுந்தார். அப்போது, மீண்டும்  எழ முயன்ற அவர்  முடியாமல் மயங்கி விழுந்தார்.  உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட  அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே  உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்நிலையில், உயிரிழந்த  விமல்ராஜின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் நிவாரணம்  அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில், “கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வல்லம் மதுரா மானடிகுப்பம் கிராமம், தெற்கு தெருவில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் 24-7-2022 அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றது. இந்த கபடிப் போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (எ) விமல்ராஜ் (21) என்ற இளைஞர் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். ​உயிரிழந்தவரின் பெற்றோருக்கும் அவரது சகோதரிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ​உயிரிழந்த சஞ்சய் (எ) விமல்ராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் மூன்று லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.