×

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

 

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அடிகரித்து வருகிறது. 100 கீழே பதிவாகி இருந்த தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 200ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 219 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால், இதுவரை தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 56 ஆயிரத்து 916ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்  129  பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 41 பேருக்கும், கோவையில்  9 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 137 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 17 ஆயிரத்து 732 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,159 ஆக அதிகரித்துள்ளது. 

இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். குறிப்பாக சுகாதாரத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்கப்படுகிறது. மேலும் பரிசோதனைகளை அதிகரித்து, தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த உத்தரவிடப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.