×

 நாகூர் தர்காவுக்கு 45 கிலோ சந்தனக்கட்டை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..

 

 நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவையான 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை தமிழ்நாடு அரசு கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் சையது காமில் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி மற்றும் அறங்காவலர் ஹாஜா நஜிமுதின் சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்.

நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது.
    
2023-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவினை முன்னிட்டு சந்தன கட்டைகளை கட்டணமின்றி வழங்கும்படி தமிழ்நாடு வக்ஃப் வாரியம், தமிழ்நாடு அரசிடம் வைத்த கோரிக்கையினை பரிசீலனை செய்த தமிழ்நாடு முதலமைச்சர், கந்தூரி திருவிழாவிற்கு தேவைப்படும் 45 கிலோ சந்தனக் கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்குவதற்கான ஆணையினை வழங்கினார். ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.