×

குப்பைகளை தரம் பிரித்து வழங்காவிட்டால் அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

 

சென்னை மாநகராட்சியில் உள்ள தனி நபர் இல்லங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. இந்த 200 வார்டுகளிலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரம் டன் குப்பைகள் வீடுகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் மூலம் உரம் மற்றும் மீத்தேன் எரிசக்தி தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகிறது. அந்தவகையில் பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, குப்பைகளை தரம் பிரித்து பெறப்படுகின்றது. மேலும், வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் வண்டி வந்திருப்பதை விசில் சத்தம் எழுப்பி அழைக்கின்றனர். அவர்களிடம் மக்கள் குப்பைகளை வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள தனி நபர் இல்லங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. குப்பைகளை தரம் பிரித்து வழங்காத இல்லங்களுக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, நோட்டீஸ் வழங்கப்பட்டும் குப்பைகளை தரம் பிரித்து தராத இல்லங்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூ அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.