×

"காய்ந்த மற்றும் கீழே விழும் நிலையில் உள்ள மரங்கள்,மரக்கிளைகள்" -  சென்னை மாநகராட்சியின் அதிரடி உத்தரவு!!

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை கேகே நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்ததில் பெண் வங்கி மேலாளர் ஒருவர் உயிரிழந்தார் . மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்ட போது மண் சரிவு ஏற்பட்டதில் மரம் சாய்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது.  இது தொடர்பாக விளக்கம் அளித்த மாநகராட்சி,  சென்னையில் 2 நாட்களாக மழை நீர் வடிகால் பணி நடைபெறவில்லை என்றும்,  மழைநீர் வடிகால் பணிக்கும் மரம் இருந்த இடத்திற்கும் இரண்டு மீட்டர் இடைவெளி உள்ளது.  மரம் இயற்கையாக விழுந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சென்னையில் கடந்த 20, 21 மற்றும் 22 ஆகிய மூன்று நாட்களில் மாலை நேரங்களில் பெய்த கனமழையின் காரணமாக 19 இடங்களில் தண்ணீர் தேங்கியது. 36 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த மரங்களை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். 


இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்ந்த மற்றும் கீழே விழும் நிலையில் உள்ள மரங்கள்,மரக்கிளைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மரங்கள் கீழே விழுந்தால் அப்புறப்படுத்த தேவையான எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.