×

குட்கா வழக்கில் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 21 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

 

குட்கா ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


குட்கா ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபீக்களான ஜார்ஜ், டிகே ராஜேந்திரன், குறிஞ்சி செல்வன், கணேசன், லட்சுமி நாராயணன், மன்னர்மன்னன், வணிக வைத்துறை, மத்திய கலால் வரித்துறை அதிகரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டும் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிக்கையில் 6 பேர் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ வசம் சென்று 4 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது 21 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புகையிலை பொருட்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். இந்த டைரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய தமிழக அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடபட்டது. அந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் தமிழக போலீஸ்  டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது. இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட  வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது குறிப்பிடதக்கது.