×

அதிமுக உட்கட்சி மற்றும் பொதுக்குழு விவகாரம்- எஸ்பி வேலுமணி சார்பில் கேவியட் மனுதாக்கல்

 

அதிமுக உட்கட்சி மற்றும் பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து அவரின் ஆதரவாளரான வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் தலைமை கழக செயலாளர் எஸ்.பி.வேலுமணி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயா் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஜூலை 11ம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது எனவும் அதிமுகவில் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று ஆகஸ்ட் 17ம் தேதி தீா்ப்பளித்தாா். தனி நீதிபதியின் அந்த தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு செப்டம்பர் 5ம் தேதி  தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. சென்னை உயர்நீதி மன்றத்தின் இரு நீதிபதிகளின் தீர்புக்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் நேற்றைய தினம் மேல்முறையீடு செய்தார்.  இந்நிலையில் இன்று ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான  பி வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுவில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு தடை அல்லது ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ் பி வேலுமணி சார்பிலும் தனித்தனி கேவியட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே வழக்கில் கடந்த 4ம் தேதி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.