×

ராணுவம் ஆக்கிரமித்துள்ள பொது சாலையை மீட்க கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

 

ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது சாலையை மீட்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு, ராணுவ அதிகாரிகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நந்தம்பாக்கம் கிராமத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பொது சாலையை, 2009ம் ஆண்டு முதல் ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த பட்டாபிராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வருவாய் துறை ஆவணங்களில் பொது சாலை என வகைப்படுத்தப்பட்டுள்ள இடத்தை ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் கிராம மக்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த நிலம் ராணுவத்துக்கு வழங்கப்படாத நிலையில், ராணுவ மருத்துவமனை சாலையை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகவும், பொதுமக்கள் நலன் கருதி அதை மீட்க கோரி அளித்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவில்லை என மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சாலையை மீட்டுத்தர அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டது.