×


செத்தால்தான் சாதிச் சான்றிதழ் கிடைக்குமா? மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம்!!

 

சாதிச் சான்றிதழ் (ST) கிடைக்காததால் நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ? என்று மநீம கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் , "காஞ்சிபுரம் படப்பையைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன்.  நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், 10ம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி 5 ஆண்டுகளாக பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராடியுள்ளார். மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சாதிச் சான்றிதழுக்காக பலமுறை அலைந்தும் பயனில்லை.மனம் வெறுத்துப்போன வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். வேல்முருகனின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம், குழந்தைகளுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

கடந்த ஜூலை மாதம் திருத்தணி அருகேயுள்ள பள்ளிப்பட்டு பகுதியில் செயல்படும் வட்டாட்சியர் அலுவலகம் முன் 75 வயது முதியவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கொண்டாரெட்டி சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்காத விரக்தியில், அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுபோல ஏற்கெனவே பலரும் சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.பழங்குடி மக்களில் சில பிரிவினர் சாதிச் சான்றிதழுக்காக வருடக்கணக்கில் போராடி வருகின்றனர். இதனால் ஏராளமான மாணவ, மாணவிகள், கல்வி,  வேலைவாய்ப்பு, அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.பழங்குடிகளுக்கு சாதிச் சான்றிதழ் கொடுக்கும் அதிகாரம் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு இருந்தாலும், அவர்கள் கள  ஆய்வு மேற்கொண்டு, சாதிச் சான்றிதழ்கள் வழங்காமல் காலதாமதம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன.

உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களைச்  சமர்ப்பித்தாலும்,  போதுமானதாக இல்லை என்று கூறி, அவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். பழங்குடிகளில் முந்தைய தலைமுறையினர் சாதிச் சான்றிதழ் வைத்திருப்பது அரிதாகவே இருப்பதால், இளம் தலைமுறையினருக்கு சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்  நீடிக்கிறது. இதனால், உயர்கல்வி பயில முடியாமல், இளம் வயதிலேயே வேலைக்குச் செல்லும் அவலம் நீடிக்கிறது. சாதிச் சான்றிதழ் கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வருவாய்த் துறை அலுவலகங்களில் குவிந்து கிடக்கின்றன. நரிக்குறவர்கள், இருளர்கள், காட்டு நாயக்கர்கள் போன்ற பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்காததால், அவர்களின் சமூக, பொருளாதார நிலை மாறாமலேயே இருக்கிறது.  அதிகாரிகளின் அலட்சியத்தால் வாழ்வைத் தொலைத்துவிட்டு நிற்பவர்கள் ஏராளம். இதேபோல, வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள், சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். 

இனியும் தற்கொலைகள் தொடராமல் இருக்க, சாதிச் சான்றிதழ் வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, குறிப்பிட்ட காலத்தில் சான்றிதழ் வழங்க வேண்டும். இதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழங்குடியினர், ஆதிதிராவிடர் உள்ளிட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பது, அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது. அனைவருக்கும் சமநீதி வழங்குவதே திராவிட மாடல் அரசின் நோக்கம் என்று கூறிக் கொள்ளும் திமுக அரசும், தமிழக முதல்வரும் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற முன்வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.