×

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

 

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ப்ளாக்-1-ன் மூன்றாவது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள 47 படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சை மற்றும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து, மருத்துவமனை ப்ளாக்-3-ன் தரை தளத்தில், நெடுஞ்சாலைத் துறையின் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-II நிதியின் கீழ் ரூ.5.34 கோடி மதிப்பீட்டில் இருபது 108 அவசரகால வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

அதேபோல, மருத்துவமனை ப்ளாக்-3-ன் 8-ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இருந்து காணொளி காட்சி மூலமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக ரூ.364.22 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2099 அதிநவீன கருவிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையங்களையும் திறந்து வைத்தார். மேலும் செங்கல்பட்டில், 50 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் அமையப்பெற்றுள்ள உலகத்தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கட்டடம் உள்ளிட்டவைகளையும் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் சேகர்பாபு, பொன்முடி, சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.