×

போதைப் பொருள் நடமாட்டத்தை வேரோடு ஒழிக்க வேண்டும் - முதலமைச்சர் உத்தரவு

 

தமிழ்நாடு முழுவதும் சோதனை நடத்தி போதை பொருள் நடமாட்டத்தை வேரோடு ஒழிக்க பாடுபட வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக இளைய சமுதாயத்தினர் கடுமையாக போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.  அத்துடன் போதை பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பல  குற்ற சம்பவங்களும் தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கிவிட்டன.  எனவே போதை பொருள் புழக்கத்தை தடுப்பது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை  எடுத்து வருகிறது. இந்நிலையில் போதைப்பொருட்கள் விற்பனை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

இவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவாக பேசினார். தமிழ்நாடு முழுவதும் சோதனை நடத்தி போதைப் பொருள் நடமாட்டத்தை வேரோடு ஒழிக்க பாடுபட வேண்டும். போதைப் பொருள் கடத்தல்காரர்களை கண்டுபிடித்து கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.