×

சேதமான பயிர்களை கணக்கெடுக்க உத்தரவு...உரிய இழப்பீடு வழங்கப்படும் - முதலமைச்சர் பேட்டி

 

மழையால் சேதமான பயிர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அவர்கள் கணக்கீடு செய்து முடித்த பிறகு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் சீர்காழியில் ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். 

டெல்டா மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார்.  கடலூர் மாவட்டத்தில் கீழ் பூவாணிகுப்பம் பகுதியில் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த புகைப்படங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். கனமழையினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் ,  நடவடிக்கைகள் வெள்ளத்தடுப்பு திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டார்.  பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நிவாரண உதவிகள் வழங்கினார்.  கடலூர் மாவட்டத்தை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். கொள்ளிடம் அருகே உமையாள்பதி கிராமத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். சீர்காழி பகுதியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய், போர்வை, அரிசி, மளிகைபொருட்கள் உள்ளிட்ட நிவாரணப்பொருட்களை வழங்கினார். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிப்படைந்த இடங்களை ஆய்வு செய்தவற்காக 3 அமைச்சர்களை நேற்று முன்தினமே அனுப்பி வைத்தேன். அவர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் சிறப்பான பணி மேற்கொண்டனர். அதோடு நின்று விடாமல் நானும் நேரில் ஆய்வு நடத்துவதற்காக இன்று வந்து ஆய்வு செய்தேன். பொதுமக்கள் திருப்தியாக தான் உள்ளனர். இன்னும் சில குறைகள் மக்களிடம் இருக்கிறது. அதையும் முழுவதுமாக தீர்த்து வைத்து விடுவோம். மழையால் சேதமான பயிர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் கணக்கீடு செய்து முடித்த பிறகு உரிய இழப்பீடு வழங்கப்படும். எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக விமர்சனம் செய்வார்கள். அவர்களின் வீண் விமர்சனங்கள் குறித்து கவலையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.